வரலாற்றுப் பொக்கிஷங்களில் ஒன்றை இழந்து
இருக்கிறது.
"இறைவனிடம் கையேந்துங்கள்! அவன் இல்லையென்று சொல்லுவதில்லை!!" என்று இசை முரசு கொட்டிய நாகூர் E.M. ஹனீபாவை அறிந்த அளவுக்கு, அவர் பாடிய பெரும்பாலான பாடல் வரிகளை எழுதியக் கவிஞர் பெருமக்கள் அறியப்படவில்லை.
நாகூர் ஹனீபா பாடிய பெரும்பாலான பாடல்களை இயற்றியவர் நாகூர் புலவர் ஆபிதீன் ஆவார். திருவை அப்துல் ரஹ்மான் (M.A. ரஹ்மான்) அவர்கள், " ஞானத்தின் திறவு கோல் நாயகம் அல்லவா " உட்பட சில பாடல்களை எழுதிக் கொடுத்தவர். உத்தம பாளையம் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். கவிமணி கா.அப்துல் கபூர் அவர்களின் சில பாடல்களும் நாகூர் ஹனீபா அவர்களால் பாடப் பட்டுள்ளன.
கவிமணி பேரா . கா. அப்துல் கபூர் அவர்கள் தமிழக அரசின் பொற்கிழி விருது பெற்றவர் . இவரின் "மிக்க மேலானவன்" புத்தகம் இறைமறையின் 87ஆவது அத்தியாயத்தின் விளக்கவுரை போல் அமைந்ததாகும்." ஞானப்புகழ்ச்சி ஓர் ஆய்வு" எனும் புத்தகம் தக்கலை பீரப்பா அவர்களின் பாடலை இவர் ஆய்வு செய்து எழுதியது .
இவையன்றி, கற்கண்டு சொற்கொண்டு உரையாற்றி உள்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடல் கடந்த நாடுகளிலும் முத்திரை பதித்த மூத்த தமிழரிஞர். இறையருள் பொழியும் கவிதைக் கொண்டல். அரும்பு உள்ளங்களுக்கும் கவிமழை தந்த கரும்புக் கவிஞர் இவர். பைந்தமிழ் நாட்டில் பாட்டரங்குகள் தோன்றக் காரணமான முன்னோடி. வாடாத மாலை இலக்கியங்கள் பலவற்றை வண்ணத் தமிழில் இயற்றிச் சிறந்த காலத்தின் கண்ணாடி. உரைநடைத் தமிழில் உயிரூட்டப் பாணியை ஆக்கி 'அழகு தமிழுக்கோர் அப்துல் கஃபூர் ' எனப் பல்கழைக் கழகத் தமிழ்த் துறை தலமைப் பேராசிரியராலேயே பாரட்டப் பட்டவர்.
சென்னை பச்சையப்பன் கல்லூரி, திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி, அதிராமப்பட்டினம் காதிர் முஹைதீன் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் முதல்வராகப் பணியாற்றியவர். தமது இளவல் பேரா. முஹம்மது பாரூக் அவர்களின் உறுதுணையோடு "மதி நா " (அறிவும் நாவும்) என்ற இதழைப் பல்லாண்டுகளாக நடத்தியவர்.
பேராசிரியர். முஹம்மது பாரூக் அவர்கள் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பேராசிரியர் மற்றும் சென்னை புதுக்கல்லூரியில் சிறப்புப் பேராசிரியர் . தமிழ் இலக்கியக் கூட்டங்கள் பலவற்றைத் தலைமையேற்று நடத்தியவர். தற்போதும் மலேசியா, சிங்கப்பூர் என ஒழிவின்றி, தமிழ் இலக்கிய மாநாடுகளில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, தமிழ்த் தொண்டு செய்து வருபவர்.
தமிழிலக்கிய வளர்ச்சியில் நாகூர் தந்தத் தமிழ்ச் செல்வர்களைப் பற்றிய தகவல்கள் மலைக்க வைக்கின்றன. 17-18 ஆம் நூற்றாண்டுகளில் சம காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்களில் சிலர் மொழிப் புலமையும், சமய அறிவும் ஒரு சேரப் பெற்றிருந்தனர். வேறு சிலர் தமிழோடு பிறமொழி ஞானம் பெற்று பன்மொழிப் புலவர்களாக உலா வந்துள்ளனர். மற்றும் சிலர் இறைமறை வெளிப்படுத்தப்பட்ட மொழியான அரபியில் ஆழ்ந்த அறிவும் ஆன்மீகத் துறையில் தேர்ந்த பக்குவமும் பெற்று திகழ்ந்திருக்கிறார்கள்.
Comments
Post a Comment