மோதல் தீர்வு அணுகுமுறைகளுக்கிடையிலான ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள்
தற்காலத்தில் பல்வேறு வடிவங்களில் ஒவ்வொரு சமூகத்திலும் காணப்படுகின்ற உலகளாவிய ரீதியிலான ஒரு தோற்றப்பாடு மோதல் எனலாம். இன்றைய மனித வாழ்வில் மோதல் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக விளங்குகின்றது. மோதல் என்பது இரண்டு அல்லது பல மனிதர்கள், குழுக்கள் அல்லது அரசுகள் என்பவற்றிக்கிடையிலான ஓர் உறவு ஆகும். ஆனால் அது ஒரு விசேட உறவாகும். அது நலன்களுக்கான போட்டி எனவும் கூறப்படுகிறது. இருந்த போதிலும் மோதல் என்றால் என்ன என்பதை வரையறுப்பது கடினமானதாகும். இதற்கு பல அறிஞர்கள் பல்வேறு வரைவிலக்கணங்களை கூறியுள்ளனர். அந்தவகையில்,

Ø       James & A Scellberg:- போட்டித்தன்மையான நலன்கள், வேறுபட்ட அடையாளங்கள் மற்றும் வேறுபட்ட மனோபாவங்கள் அடிப்படையில் தனிநபர்களுக்கிடையில் காணப்படும் எதிர்நிலையே சமூக மோதல் எனலாம்.

Ø  JL. Hocker & W.Wilmot:- சில இலக்குகளை அடைந்து கொள்வதில் ஒருவருக்கொருவர் தலையீடு செய்வதும் ஒவ்வாத இலக்குகளை கொண்டிருப்பதாக உணருகின்ற சுதந்திர மக்களின் ஊடாட்டம் மோதலாகும்.

Ø Prof. Christober mitchell:- பொருந்தாத இலக்குகளைக் கொண்டிருப்பதாக நம்புகின்ற இரு தரப்பினர்க்கிடையான ஒரு உறவே மோதலாகும்.

இவ்வாறான மோதலானது தீர்க்கப்படும்போது அது பல செயற்பாடுகளுக்கு உட்பட வேண்டும் இதுவே மோதல்தீர்வு, மோதல்முகாமைத்துவம், மோதல் நிலைமாற்றம், மோதல் தடுப்பு என அழைக்கப்படுகிறது. இந்த எண்ணக்கருக்களுக்கு இடையில் வல்வேறு ஒற்றுமை, வேற்றுமை என்பன காணப்படுகின்றன. எவ்வாறாயினும் இவை ஒரு மோதல் தீர்வு வழிமுறைகளாகும்.

மோதல்தீர்வு, மோதல்முகாமைத்துவம், மோதல் நிலைமாற்றம், மோதல் தடுப்பு என்பவை சமகால மோதல் தீர்வு முயற்சியில் பயன்படுத்தும் நுட்பங்கள் ஆகும். இவற்றின் ஒற்றுமைகளை நோக்கினால் அவை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுவதே இதன் ஒற்றுமைக்கு காரணம் ஆகும்.
மோதலைத் தீர்ப்பதற்கான பல்வேறு அணுகுமுறைகளுக்கிடையில் பலமான தொடர்புகள் காணப்படுகிறன. இவை ஒவ்வொன்றும் ஏனைய அணுகுமுறையில் இருந்து மாறுபட்டதாக அமையாது. மேலும் சமாதானத்தை ஏற்படுதல் என்பது மோதல் முகாமைத்துவத்துடன் அதிகம் இணைந்திருப்பதோடு சமாதானத்தை கட்டியெழுப்புதல் என்பது மோதல் நிலைமாற்றத்துடன் அதிகம் இணைந்ததாக அமைந்திருக்கின்றது. இதன் மூலம் ஒருவர் சமாதானத்தை கட்டியெழுப்புதல் பற்றிய எண்ணக்கருவை பயன்படுதத்துவாராயின் நடைமுறையாளரின் நோக்கம் மோதலை மாற்றுவதை நோக்காகக் கொண்டிருக்கும்.

சமாதானத்தை கட்டியெழுப்புதல் ஊடாக மோதல் மாற்றப்படுமாயின் இது சாதக சமாதானத்திற்கு வழிவகுக்கும் சாத்தியம் காணப்படுகின்றது. 

                   மோதல் அணுகுமுறைகள் தொடர்புபடும் விதம் 


சகல மோதலையும் தீர்ப்பதற்கான வாய்ப்புகள் காணப்பட்டாலும் பொதுவாக முரண்பாடுகள் தீர்க்கப்படுவதாக அன்றி முகாமை செய்யப்படுவதாகவே காணப்படுகிறது. குழுக்களுக்கிடையிலான மற்றும் நாடுகளுக்குள்ளான மோதலின் போது இது மேற்கொள்ளப்படுகிறது. மோதல் தீர்வில் பயன்படுத்தும் அதே வழிமுறை மோதல் தடுப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக நம்பிக்கையை வளர்த்தல், புரிந்துணர்வுடன் இருக்கும் நிலையை ஏற்படுதல், பகைமை உணர்வு, வன்முறையை குறைத்தல், தரப்பினரின் தேவைகளுக்கும், ஆர்வங்களுக்கும் பதிலளித்தல் போன்றவை ஆகும். இவ்வாறாக இவ் எண்ணக்கருக்களுக்கு இடையில் ஒற்றுமை காணப்பட்டாலும் வேற்றுமைகளும் காணப்படத்தான் செய்கின்றது.

மோதலை தீர்த்தல், முகாமை செய்தல், நிலைமாற்றம் செய்தல், மோதல் தடுத்தல் என்பவையே மோதல் தலையீட்டின் இறுதி நோக்கமாக அமைகின்றது. இவை அடிப்படையில் பல்வேறு வழிமுறைகளைக் மோதல் தீர்வில் கூறுகின்றது.

Ø       மோதல் தீர்வு:- மோதலிற்கான மூல காரணத்தை குறிவைக்கும் உடன்பாடொன்றை எய்துவதற்காக வன்முறை ரீதியிலான அல்லது வன்முறையற்ற முறையை பயன்படுத்தல். இதற்கு நடுத்தர அளவிலான கால செலவு அவசியமாகின்றது
.
Ø   மோதல் முகாமைத்துவம்:- மோதல்கள் மட்டுமே முகாமைத்துவம் செய்ய முடியும் என்பதுடன், இது மூல காரணம் தொடர்பாகவன்றி வெளிப்படையான பிரச்சினைகள் தொடர்பாகவே அவதானம் செலுத்துகின்றது. குறுகிய கால நேரத்தில் இதனை அடைந்து கொள்ள முடியும்.

Ø  மோதல் தடுப்பு:- மோதல் தடுப்பு / தவிர்ப்பு என்பது Miall Etal  என்பவரின் கருத்துப்படி இரண்டு வகையில் நோக்கப்படுகிறது

1.        மேலோட்டமான தடுப்பு (Light prevention):-  வன்முறைக்கான ஒரு தெளிவான கொள்ளளவுடன் ஆயுத மோதல் உருவாவதில் இருந்து சூழ்நிலைகளைத் தவிர்ப்பதாகும்.
2.        ஆழமான தடுப்பு (Deep prevention):- மோதலின் ஆழமான கருத்துக்களை எடுத்துரைப்பதாகும். இது அபிவிருத்தி, அரசியல், சமுதாய பிரச்சினைகளை தடுப்பதாக இருக்கும்.

Ø  மோதல் நிலைமாற்றம்:- மோதலின் முழு வடிவத்தையும் அவதானிப்பதோடு அது மீண்டும் தோன்றாத வகையில் அதன் மூல காரணத்தை மாற்றுவதற்கு இது முயற்சிக்கின்றது.
இவ்வாறாக இவ் எண்ணக்கருக்கள் வேறுபட்ட விடயங்களை கூறுகின்றது.

மோதலை ஒரு மரமாக கற்பனை செய்தால் மரம் இறந்து கொண்டிருக்கின்றது. மரத்தை உயிருடன் காப்பாற்ற வேண்டுமாயின் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். மரத்தின் தண்டையும், கிளைகளையும் மற்றும் இலைகளையும் மோதல் முகாமைத்துவம் ஆராய்ந்து அதற்கான தீர்வொன்றை கண்டறிகின்றது.நிலைமையை மாற்றுவதற்கு இது அப்போதைய நிலையில் மேலோட்டமாக அமைந்திருக்கும். இந்த தீர்வு தொழில்நுட்பம் மூல காரணங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தவில்லை. ஆனால் பிரச்சினையை முடிந்தளவு விரைவில் தீர்ப்பதற்கு இது முயற்சி செய்கின்றது. அதேநேரம் மரத்தின் வேர் தொடர்பாக மோதல் தீர்வு அவதானம் செலுத்துகின்றது. மரத்தின் தண்டு, கிளைகள் மற்றும் இலைகள் அனைத்தும் ஒழுங்காக இருப்பதை இது உறுதிப்படுத்தும் இதனை தோன்டியே ஆய்வு செய்ய வேண்டி இருப்பதால் இதற்கு நீண்ட காலம் செல்லும் மற்றும் இதற்கு சில அர்ப்பணிப்புகள் தேவைப்படும். இறுதியாக மரத்தை அதன் வேர், தண்டு, கிளைகள் மற்றும் இலைகள் என்பவற்றை ஆராய்வது மட்டுமன்றி, அது பெற்றுக்கொள்ளும் நீரின் வகையும் அளவும், மண்வகை, அதைச்சூளவுள்ள விலங்குகளின் வகைகள் என்பன தொடர்பாகவும் மோதல் நிலைமாற்றம் அவதானம் செலுத்துகின்றது. இதற்கு அதிக காலவிரயம், அதிக அர்ப்பணிப்பு மற்றும் அதிக பரிட்சைகள் அவசியமாகின்றன. இது மரம் இறப்பதை தடுப்பது மட்டுமல்லாது அது முகம்கொடுக்கும் ஆபத்துக்கள், எதிகாலத்தில் முகம் கொடுக்கக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பாகவும் வெளிப்படுத்துவதாக அமையும்.

மோதல் முகாமைத்துவம் என்பது மோதல் தீர்வுக்கு சமமான ஒன்றல்ல மோதல் தீர்வு என்பது பிரச்சினையைத் தீர்த்தலினைக் குறிக்கிறது. மோதல் முகாமைத்துவம் என்பது தீர்வினை அன்றி ஒரு நடைமுறைச்செயற்பாடு ஆகும். அதாவது தீர்ப்பானது மோதலின் காரணிகளைக் குறைக்கும் அதேவேளை முகாமைத்துவம் என்பது நடுநிலைப்படுத்தல், சமாதானப்பேச்சுவார்த்தை, மாநாடு நடத்தல் போன்ற செயற்பாடுகள் பற்றியதாகும்.

புடன் என்ற அறிஞரின் கூற்றுப்படி தகராறுகள் மட்டுமே முகாமைத்துவத்தின் ஊடாக தீர்க்கப்பட முடியும் என கூறுகின்றார். இது பிரச்சினையை தீர்ப்பதன்றி நிலைமையை கட்டுப்படுத்துவதாக அமையும் என்கின்றார். இதற்கு கிழக்கு ஆசிய நாடுகளிடையே நீர்பிரச்சினையை உதாரணமாக கூறுகின்றார். நீர்ப்பிரசினை ஏற்படும் போது நீரைப்பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் நிலைமையை அவர்கள் முகாமை செய்கின்றார்கள். புடனின் கூற்றுப்படி முரண்பாட்டு நிலை ஒன்றுக்காக இத்தகைய விட்டுக்கொடுப்பு ஒன்றை மேற்கொள்வது முடியாத காரணியாக அமையும். ஆனால் இதனை தகராறுகளுக்கு பயன்படுத்த முடியும். எனவே மோதல் முகாமைத்துவம் என்பது மோதல் தீர்வில் இருந்து பல வழிகளில் மாறுபட்டதாக அமையும்.

மோதல் நிலைமாற்றம் என்பது மோதல் தீர்வு, முகாமைத்துவம் என்பவற்றில் இருந்து வேறுபட்ட அர்த்தத்தை தருகின்றது. மோதல் நிலைமாற்ற அணுகுமுறை ஆனது மோதல் தரப்புக்களையும் அவற்றின் உறவுகளையும் பிரச்சினைகளையும் மாற்றுகின்றது. பிரச்சினை ஒன்றின் செயன்முறையில் மோதலின் முழு இயங்கியலையும் நிலைமாற்றும் அடிப்படை விடயங்கள் காணப்படுகின்றன. இவ்வாறு நிலைமாற்றப்படும் மூலப்பிரச்சினையானது புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கலாம் இதனால் இது மோதல் முகாமைத்துவம், தடுப்பு, தீர்வுக்கு எதிராக காணப்படுகிறது.

மோதல் தலையீட்டில் ஏனைய எண்ணக்கருக்களை விட வேறுபட்டதும் நடைமுறையில் செயற்படுவது மோதல் தடுப்பு ஆகும். இன்று சர்வதேச மோதல்கள் தடுப்பதன் மூலமே முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றன. இதற்காக இன்று ஐ.நா அமைப்பு, நேட்டோ, ஐரோப்பிய யூனியன், அரசு சார் அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் போன்றவை செயற்படுகின்றன. இதற்கு ருவாண்டா, போஸ்னியா மோதலில் ஐ.நா மேற்கொண்ட தடுப்பு அதனோடு கூடிய சமாதான முயற்சிகளைக் கூறலாம்.

இவ்வாறாக மோதல் தீர்வு எண்ணக்கருக்களுக்கு இடையில் பல ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் காணப்படுகின்றது.


ஆக்கம் - மீஸா பேகம் 

Comments

Popular posts from this blog