14-ம் நூற்றாண்டில் 1,20,000 கி.மீ. பயணித்த 

ஸ்லாமிய சாகசப் பயணி 

இப்ன் பதூதா




ரயில், கார், பஸ் போன்ற எந்த வாகனமும் கண்டுபிடிக்கப்படாத 14-ம் நூற்றாண்டில் இஸ்லாமிய சாகசப் பயணி இப்ன் பதூதா, பயணம் செய்த மொத்தத் தொலைவு எவ்வளவு தெரியுமா? 1,20,000 கி.மீ. ஆப்பிரிக்கா, ஆசியா, அரேபியா, ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் சென்றிருக்கிறார்.

புனிதப் பயணம்

அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஹஜ் புனிய யாத்திரை பயணத்தை மொராக்கோவில் 1325-ம் ஆண்டில் அவர் தொடங்கினார். அந்தப் பயணம் பெரும் உத்வேகம் தரவே, இஸ்லாமிய நாடுகளுக்கு தொடர்ந்து அவர் பயணிக்க ஆரம்பித்தார்.

அவருடைய பயணத்துக்கு முடிவே விழவில்லை. கற்றறிந்த முஸ்லிமாக இருந்த அவரை அறிஞர்களும் ஆட்சியாளர்களும் சென்ற இடமெல்லாம் வரவேற்றார்கள். அவருடைய பயணங்கள் தரை வழியாகவோ, கடல் வழியாகவோ அமைந்தன.

ஒட்டகங்களுடன்

டாஞ்சியர் நகரில் இருந்து 1325-ல் இப்ன் பதூதா தன் பயணத்தைத் தொடங்கினார். ஒட்டகங்களில் பயணித்த ஒரு வணிகர் கூட்டத்துடன் கிழக்கு நோக்கிப் பயணப்பட்டார். அலெக்ஸாண்ட்ரியாவில் பாரோக்களின் கலங்கரை விளக்கத்தைப் பார்த்தார். அது பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெருசலேம் புனித நகரில் அற்புதமான தங்கத் தகடு பதிக்கப்பட்ட ஹரம் அல் ஷரிஃப் என்ற மசூதியை பார்த்தார். மெக்காவில் இஸ்லாமிய புனித இடமான காபாவில் தொழுதார்.

இரவில் பயணம்

பிறகு மெக்காவில் இருந்து வடக்கே சென்ற மற்றொரு பயணிகள் குழுவோடு சேர்ந்துகொண்டார். அந்தக் குழு இரவில் தீப்பந்தத்தை ஏந்திக்கொண்டு பயணித்தது. ஏனென்றால், பகலில் பயணம் செய்தால் மிகக் கொடுமையான தகிக்கும் வெப்பத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பாக்தாத் பேரரசுக்குச் சென்று அந்நாட்டு அரசரைச் சந்தித்தார்.

இப்ன் பதூதா 1327-ல் உடல்நலம் குன்றினார். மெக்காவுக்குத் திரும்பி ஓய்வு எடுத்தார். உடல்நலம் தேறிய பிறகு செங்கடல் வழியாக, ஏடன் துறைமுகத்துக்குச் சென்றார். அங்கிருந்து ஆப்பிரிக்காவின் தெற்கு திசையில் இருந்த மோகதிசு என்ற துறைமுகத்துக்குப் புறப்பட்ட வணிகக் கப்பலுடன் இணைந்துகொண்டார்.

வணிக முறைகள்

மோகதிசுவுக்குப் பிறகு ஆப்பிரிக்கக் கடற்கரையில் இருந்த கில்வாவுக்கு இப்ன் பதூதா சென்றார். அங்கே வர்த்தகர்கள் தங்கத்தையும் யானைத் தந்தத்தையும் பண்டமாற்று செய்துகொண்டதை பதிவு செய்துள்ளார். ஸபர் துறைமுகத்திலிருந்து இந்தியாவுக்குக் குதிரைகள் ஏற்றுமதி செய்யப்படுவதையும் பதிவு செய்துள்ளார்.

கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு 1349-ல் மொராக்கோவுக்குத் திரும்பிய அவர், இரண்டு ஆண்டுகள் கழித்து தன் கடைசிப் பயணமாக சஹாரா பாலைவனத்தைக் கடந்து மாலி பேரரசுக்குச் சென்றார். அந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய அவர், தனது சாகசப் பயண அனுபவங்களை ரிஹ்லா என்ற புத்தகமாக எழுதியிருக்கிறார்.

நன்றி :- தி இந்து

Comments

Popular posts from this blog